முத்தக் கவிதை - ஆத்மாநாம்


சர்வதேச முத்த தினமாம். இதழ் முத்தம், முத்தம், இது, அது என்று எழுதுவதை விட்டே ஒரு ஏழு எட்டு ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.  அதை எழுதுவதற்கு கோடான கோடி பேஸ்புக் கவிஞர்கள் இருப்பதால் அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவது நலம் என்று கம்பெனி ஒதுங்கிக்கொண்டது. 

ஆனாலும் யாரேனும் முத்தத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்பார்களெயெனில் ஆத்மாநாமின் ஒரு முத்தக் கவிதையைப் பகிர்வேன். எனக்கு மிகப்பிடித்தமான கவிதை இது. "இருக்கும் சில நொடிகளில் உங்கள் இருப்பை நிரூபிக்க" என்கிற வரிகள் ஒரு முத்தம் ஏன் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு சர்வதேசக் காரணமாகவும், மேலும் யாராலும் மறுக்கப்பட முடியாத ஒரு காரணமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்பானவர்களுக்கு முத்தம் கொடுங்கள். ஏனெனில் இதுதான் உங்கள் கடைசி முத்தமாகக் கூட இருக்கலாம். அதை நீங்கள் அறியாமலிருக்கலாம்.

இனி ஆத்மாநாமின் கவிதை.
~
முத்தம் கொடுங்கள்
பரபரத்து
நீங்கள்
முன்னேறிக்கொண்டிருக்கையில்
உங்கள் நண்பி வந்தால்
எந்தக் தயக்கமும் இன்றி
இறுகக் கட்டித் தழுவி
இதமாக
தொடர்ந்து
நீண்டதாக
முத்தம் கொடுங்கள்
உங்களைப் பார்த்து
மற்றவர்களும்
அவரவர்
நண்பிகளுக்கு முத்தம் கொடுக்கட்டும்
விடுதலையின் சின்னம் முத்தம்
முத்தம் கொடுத்ததும்
மறந்துவிட்டு
சங்கமமாகிவிடுவீர்கள்
பஸ் நிலையத்தில்
ரயிலடியில்
நூலகத்தில்
நெரிசற்பூங்காக்களில்
விற்பனை அங்காடிகளில்
வீடு சிறுத்து
நகர் பெருத்த
சந்தடி மிகுந்த தெருக்களில்
முத்தம் ஒன்றுதான் ஒரே வழி

கைவிடாதீர்கள் முத்தத்தை
உங்கள் அன்பைத் தெரிவிக்க
ஸாகஸத்தைத் தெரிவிக்க
இருக்கும் சில நொடிகளில்
உங்கள் இருப்பை நிரூபிக்க
~

Comments