தாயம் - மஹாத்ரியா ரா


 ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு மனிதர்கள் மூலம் நம் கைகளுக்கு வந்து சேர்வது எத்தனை இயல்பானது, எவ்வளவு அழகானது.


சற்று நேரம் புத்தக அடுக்கில் அமர்ந்து ஒவ்வொரு புத்தகமும் வீட்டிற்குள் நுழைந்த கதையை யோசித்துப் பார்த்தால் சுவாரசியத்துக்குப் பஞ்சம் இருக்காது இல்லையா.


சமீபத்தில் மருத்துவர் ஒருவரை சந்திக்க கோவை சென்றிருந்தோம். அங்கு அவருடைய பல புத்தகங்களில் "தாயம்" முதன்மையானதாக துருத்திக்கொண்டு வெளியில் நின்றது. அதன் தடிமனான புத்தகப் பெயர் கொண்ட பகுதி காரணமாக இருக்கலாம்.


அப்போதிருந்தே இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருந்து ஒருவாரத்திற்கு முன் வாங்கினேன். ஒரு மருத்துவர் எதை மிகச்சிறந்த புத்தகம் என்று கருதுகிறார் என்று தெரிந்துகொள்ள நினைத்த ஆர்வமே இந்தப் புத்தகத்திற்கு என்னை அழைத்துச் சென்றது. விறுவிறுப்பான இரண்டு இரவு நேர வாசிப்பில் இதை வாசித்து முடித்தேன்.


அறிமுக வாசகர்களிலிருந்து அனைத்துத் தரப்பினரும் வாசிக்கிற வகையில் எளிய , ஆழ்ந்த கருத்துகள் அடங்கிய  சுயமுன்னேற்றக் கீற்றுகள் அடங்கிய சிறு சிறு கட்டுரைகளின் தொகுப்பு. 


மஹாத்ரியாவின் கருத்துகள் உள்ளபடியே நாம் பல இடங்களில் கடந்து வந்திருப்பவை போலத் தோன்றினாலும் இதை ஒரு புத்தகமாகத் தொகுத்து தொடர்ச்சியாக வாசிக்கையில் மிகச்சிறந்த ஒரு மனவளக்கலை பயிற்சி போலிருக்கிறதை உணர முடிகிறது. ஒரு புது வாசகன் அன்றாடம் தேநீர் இடைவேளையிலோ  அல்லது இரவு படுக்கைக்கு முன்போ இதை சிறுகச் சிறுக வாசித்து முடித்திடலாம். 


🎯 வாசிக்க வாசிக்க The Art of Thinking Clearly புத்தகம் ஒவ்வொரு பக்கத்திலும் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. ஒருவகையில் எனக்கு இப்புத்தகம் நானறிந்த கருத்துக்களை தமிழில் மீள்வாசிக்கிறதைப் போலொரு உணர்வைத் தந்தது.


🎁  பெண்கள் ஆண்கள் யாருக்கு வேண்டுமானாலும் பரிசாகக் கொடுக்கலாம்


♥ எந்த விழாக்களுக்கும் குறிப்பாக திருமணத் தம்பதிகளுக்கு பரிசாகத் தர ஏற்ற எளிமையான அதே நேரம் ஆழ்ந்த கருத்துகள் அடங்கிய புத்தகம்


⚡ விறுவிறுப்பான தொய்வற்ற வாசிப்பு. நாகலட்சுமி அவர்களின் நேர்த்தியான மொழியாக்கம்.


🧘 தியானிக்கப் படவேண்டிய / மீள்வாசிக்கப் படவேண்டிய கருத்துக்களின் தொகுப்பு 


ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புகிறவர்களுக்கு  Unposted Letters என்கிற தலைப்பில் இப்புத்தகம் கிடைக்கிறது


நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.

Comments