கிழவனும் கடலும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே
வாழ்வு அதிர்ஷ்டகரமானதா இல்லையா? அல்லது யாருக்கு அதிர்ஷ்டகரமானதாக அமைகிறது. மனிதன் தன் மெய்வருத்தி உழைக்கிற எல்லாவிதமான உழைப்புக்கும் தக்க ஊதியம் கிடைக்கிறதா? சமூகத்தின் சுரண்டல்கள் மனிதனின் கைக்கெட்டியவற்றை வாய்க்கெட்டாமற் செய்யும் சூழல்கள் தான் எத்தனை.
எவ்வளவு உழைப்பு உழைத்தாலும் அதில் பிக்கல் பிடுங்கல்கள் எத்தனை?
~
சாண்டியாகோ வெகு காலமாக அதிர்ஷ்டத்தை இழந்த ஒரு முதிய மீனவர். அதாவது எண்பத்தி நான்கு நாட்கள் கடலுக்குச் சென்று மீன் எதுவும் சிக்காமல் கரைக்குத் திரும்புகிறார். இந்த முறை செல்கையில் ஒரு மிகப்பெரிய மீன் மாட்டுகிறது. படகைவிடப் பெரிய மீன். ஆழ்கடலிலிருந்து அவர் தன்னந்தனியாளாக அந்த மீனைக் கொண்டு வந்து கரைக்குச் சேர்க்கிறாரா? அப்படிச் சேர்த்தாரெனில் அவர் பட்ட இடர்ப்பாடுகள் என்னென்ன. கற்ற பாடங்கள் என்ன. என்பதைப் பக்கத்திற்குப் பக்கம் படகில் கூடப் பயணித்ததைப் போல நமக்குச் சித்தரிக்கிறது இந்நூல்.
~
~
1.கடலில் யாருமே தனித்திருப்பதில்லை.
2.நீரலைகளற்ற நேரத்தில் கடலும் சில நேரம் அமைதியில் தனிமையில் உறங்கும்
3.ஆழ்கடலின் இருட்டில் அலையும் ஒரு திமிங்கலமாக நான் மாறவேண்டும்
~
~
போன்ற வரிகளுக்குள் எல்லாம் ஹெமிங்வே கடலின் ஈரத்தை சொல்லில் வார்த்தெடுத்திருக்கிறார்.
தமிழில் எம்.எஸ். அவர்களின் மொழிப்பெயர்ப்பிலும் உப்புக்காற்று வாடைக்குக் குறைவில்லை. ஆங்கிலத்தில் The Old man and the sea வாசித்திருக்கிறேன் என்றாலும் தமிழில் வாசிப்பது அதனினும் கூடுதல் இன்பம்தான்.
மனிதனுக்கு வலி ஒரு பொருட்டல்ல
மனிதனுக்கு வெற்றிக்களிப்பை விட தோல்விக்குப் பின்பான தியாகம், அமைதியான இயல்புநிலை, ஆகியவையே வாழ்வை இன்னும் ஆழமாக போதிக்கிற ஆசான் என்று திண்ணமாக உணர்த்துகிற இன்னொரு சுவையான நூல்.
அவசியம் வாசிக்கவேண்டிய கிளாசிக் வரிசை
Comments
Post a Comment