நீர்மாலை - மு.சுயம்புலிங்கம்

 

நேற்றைய பேறு என்று நினைக்கிறேன் நீர்மாலையை வாசித்தது.


புத்தகக் கண்காட்சி நாட்களில் 50 புத்தகங்கள் வாங்கினேன். அவற்றில் முதலாவதாக வாசிக்கத் தேர்ந்தது ஐயா மு.சுயம்புலிங்கத்தின் நீர்மாலை சிறுகதைத் தொகுப்பு.


28 குறுங்கதைகள். அதிகமும் இல்லாத குறைவும் இல்லாத சிக்கனமான அதேநேரம் கனமான கதைசொல்லல் இரண்டிலிருந்து மூன்று பக்கங்களுக்கு மட்டுமே ஒவ்வொரு கதையும் நீள்கிறது. தமிழில் நான் இதுவரை வாசித்திராத எளிமையான தனித்துவமான கவித்துவமான நடையில் சொல்லப்பட்டிருக்கிற கதைகள் இவ்வளவு எளிமையாக ஒரு கதையைச் சொல்லிவிடமுடியுமா என்று ஆச்சரியமூட்டின.


ஆரம்பத்தில் பிடிபடமறுத்த கதைசொல்லல் முறை இரண்டு மூன்று கதைகளிலேயே பிடிபட சடசடவென ஒவ்வொரு கதையையும் ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன்.


விசாகம், குடி, பிச்சை,ஜலதோசம், சொகுசுப் பேருந்து, தடயம், மவராசி போன்ற கதைகள் இத்தொகுப்பின் மாலைகள் எனலாம்.


எல்லா கதைகளுமே சாதாரண, எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப் பாடுகள் தான்.

வெள்ளரிக்காய் விற்கிறவர்களும், பழங்கள் விற்கிறவரும், வீட்டு வேலை செய்கிறவர்களும் என எளிய மனிதர்களின் அன்றாடப் பாடுகள்.


ஐயா மு.சுயம்புலிங்கத்தின் இக்கதைகளை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்றே நினைக்கிறேன்.


இந்த எளிமையும், வட்டார வழக்கும் அவருடைய சொத்துகள். அவற்றை ஒருவனால் திருடிக்கொள்ள முடிந்தால் அவனுக்கு அது பேறு.


அவசியம் வாசிக்கவேண்டிய தொகுப்பு.

~

~


காலச்சுவடு வெளியீடு| 125

நீர்மாலை| மு.சுயம்புலிங்கம்

Comments