ஜொனாதன் லிவிங்ஸ்டன் சீகல் - மதிப்புரை

 உங்களைப் புறக்கணிக்கிற, உங்களால் ஒன்றைச் செய்யமுடியாதென்று தீர்ப்பெழுதுகிற, அல்லது உங்களால் எதைமட்டும்தான் செய்யமுடியும் என்று வரையறுக்கிற இந்தச் சமூகத்தின் முன் முடிவுகளையும், அநீதிகளையும் எதிர்த்துப் போராட, உங்களை உங்களுக்கே இன்னும் வெளிச்சமாய் காட்டக்கூடிய, அல்லது இன்னும் ஆழமாய் உணரவைக்கக் கூடிய வலிய ஆயுதங்களைப் போன்ற  இரண்டு புத்தகங்கள் இருக்கின்றன.

1. The old man and the sea - Ernest Hemingway
2. Jonathan Livingston Seagull - Richard Bach

ஒருவர் தன் வாழ்வில் குறைந்தபட்சம் இந்த இரண்டு புத்தகங்களையாவது வாசித்தே தீரவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஜொனாதன் லிவிங்ஸ்டனின் கதையும் சரி கடலும் கிழவனில் வரும் சாண்டியாகோவும் சரி. வாழ்வின் இயலாமைகளைக் கேள்வி எழுப்புக்கிறவர்கள். எதிர்த்துப் போராடுகிறவர்கள். ஜெயிக்கிறவர்கள். வழிநடத்துகிறவர்கள்.

ஜொனாதன் கடற்பறவை  கதையின் தொடக்கத்தில் உண்டு உறங்குவது மட்டும் வாழ்க்கையல்ல, பறப்பது, பின் வேகமாய்ப் பறப்பது, பின் சிகரங்களைக் கடப்பது, பின் சொர்க்கத்யை அடைவது என்று தன் சிந்தனையின் மூலம் தன் இயங்குசக்தியை வளர்த்துக்கொண்டே இருக்கிற ஒரு பறவை.

ஜொனாதன், வரைமுறைகளை மீறிப் பறந்ததால் பறவைக் கூட்டத்திலிருந்து விலக்கிவைக்கப் படுகிறது. பின்னர் தன் சுதந்திர உணர்வைப் புரிந்துகொண்டு பல பறத்தல் உத்திகளைக் கற்றுக்கொள்ளத் தொடங்குகிறது, ஒரு கட்டத்தில் மலைகளையும் கடந்து சொர்க்கத்தை அடைகிறது. பின் சியாங் என்ற ஒரு மூத்த பறவையிடம் பாடங்களைப் படித்துவிட்டு திரும்ப பூமிக்குத் திரும்பி தன்னைப் போல கூட்டத்திலிருந்து விலக்கப்பட்ட பத்து சீகல் பறவைகளுக்கு பறக்கச் சொல்லித் தருகிறது.ஜொனாதன் மறைவுக்குப் பிறகு, ஜொனாதனைப் போல் இன்னொரு பறவை உருவாகிறது. The legacy continues.

என்னால் வானத்துக்குப் பறக்க முடியும் என்று சொன்ன முதல் பறவை ஜொனாதன். பறந்து காட்டியது ஜொனாதன். திரும்பி வந்ததும் ஜொனாதன். விலக்கி வைத்தது கூட்டம், வேடிக்கை பார்த்தது கூட்டம், திரும்பி வந்தபோதும் அதை பேய் என்று சொன்னது கூட்டம்.

கூட்டம் என்பது  என்ன என்று நன்றாகவே உங்களுக்குப் புரியும் தானே? சமூகம் தான் இந்தக் கூட்டம். உன்னால்  முடியாது என்று அது சொல்கிற ஒவ்வொன்றையும் முடியும் என்று நீ சொல்லவேண்டும். முடித்தும் காட்டவேண்டும். 

செயல்வீரர்களுக்கான உத்வேகமளிக்கக்கூடிய அற்புதமான புத்தகம். என் வாழ்நாள் முழுக்க , நான் சந்திக்கிற மனிதர்களிடம்  இதைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பேன். 

ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டிய புத்தகம்.

~~
@tamiIbooks_ 
@cheravanji_kavithaigal
@cheravanji 
~~

Comments