பிரான்சிஸ் கிருபா கவிதைகள்

கிருபா இறந்தபோது ஒரு அஞ்சலியாகப் பகிரமுடியாமல் போன பதிவு. இறந்த பின்பே பலரால் அறியப்படுவது சமூகத்தின் சாபம். எழுத்தாளர்களுக்குக் கிடைக்கிற காலாவதியாகிப் போன மரியாதை போல் இழுக்கு சமூகத்திற்கு வேறொன்றுமில்லை. கிருபாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

தமிழ்க் கவிதையுலகில் அதிசயமாய்ப் பூத்து அவசரமாய் உதிர்ந்துபோன கவிதை பிரான்சிஸ் கிருபா. கவிதைக்கு ஒரு நேர்மையான தொனி இருந்தால் மொழி இருந்தால் அது கிருபாவினுடைய மொழியாகத் தான் இருக்கும். கவிதைக்குள் நிழலாடும் தனிமையிலேயே அல்லது அந்த ஏகாந்தத்துக்குள்ளேயே தான் வாழ நினைத்த வாழ்வை வாழ்ந்து முடித்துக்கொண்ட பெருங்கலைஞன்.

சீக்கிரம் இறந்துவிட்டார் என்று நண்பர் பலர் வருந்தியதற்கு இப்படிச் சொன்னேன். " கடவுள்கள் அப்படித்தான், நம்மோடு வாழும்போது அவர்களை இனம்கண்டுகொள்ள மாட்டோம், கொண்டாடமாட்டோம், சென்ற பின் சிலை வைக்காதது குறித்து வருந்துவோம்'.

கிருபா இந்த கொண்டாட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிறவிக் கலைஞன். அழகூறித் ததும்புகிற இப்படி ஒரு மொழியின் லாவண்யத்தை வைத்த்துக்கொண்டு இந்த சாதாராண உலகில் ஒரு கவிஞன் வாழ்வதென்பது சாபக்கேடு. சினிமா பாடலாசிரியர்களை மட்டுமே எழுத்தாளர்களாக அறிந்துகொள்கிற, கொண்டாடுகிற அளவுக்குத்தான் இளைய சமூதாயத்தின் தேடல் இருப்பது இலக்கியத்தின் மேல் வீசிப்பட்ட இழிநிலை. கிருபா இன்னும் கொண்டாடப் பட்டிருக்க வேண்டும், கிருபா இன்னும் பல உயரங்களைத் தொட்டு ஒரு சாதாரண மனிதன் அனுபவிக்கிற வாழ்வின் இன்பங்களை அனுபவித்திருக்க வேண்டும் என்று மனம் ஒரு பக்கம் ஏங்கினாலும் உண்மையின் பக்கத்தை நினைத்தும் சற்றே பெருமூச்சு விட்டுத்தான் கொள்கிறது.

விஞன் கடவுளைப் போல, சாதாரண வாழ்க்கை, சாதாரண இன்பங்கள் தான் அவனுக்குச் சாபங்கள். கிருபாவுக்கு இவ்வுலகம் தந்ததெல்லாம் அவர் கவிதைகளில் சொல்லிக்காட்டுகிற இடது கை செய்த உதவியை வலது கை அறியாது என்பதைப் போன்ற பயனற்ற உதவிகள் தான்.

தன் வாழ்வில் தான் சந்தித்த ஒவ்வொரு தருணங்களையும், சந்திக்காத ஒவ்வொரு இன்பங்களையும் தன் கவியுலகத்த்துக்குள்ளேயே தன் சொற்களுக்குள்ளேயே எழுதிப் பார்த்து வாழ்ந்துவிட்டுப் போன பெருங்கலைஞன். பாறைகளை உண்டு பசியாறிய தேவதூதன். அவன் புகழ் தமிழ் போல் வாழ்க!
 

Comments

Popular Posts